Thursday 15 December 2011

எங்கள் வீடு

தென்றலிலே தவழ்ந்து வரும் மலரின் வாசம்
தெவிட்டாத கனியின் சுவை தாயின் நேசம்
தென்னையின் கள்ளமிலா உயர்ந்தோங்கிய பாசம்
தெற்குமூலையில் செம்பருத்தி கதைகள் பேசும்

முற்றத்தில் முத்தாய்ப்பாய் முருங்கை மரம்
சுற்றத்தின் அன்பும் கருணையும் எங்கள் வரம்
குற்றத்தை மன்னிப்போம் என்றும் பல தரம்
வருகை புரியுங்கள் எங்கள் வீட்டிற்கு ஒருதரம்

சாணம் மெழுகிய வாசல் பளபளக்கும் - அதில்
வானம் பார்த்து பூக்கள் பல மினுமினுக்கும்
காணம்பாடி காக்கைகுருவிகள் முனுமுனுக்கும்
தானியங்கள் தின்று நீரருந்தி சலசலக்கும்

வாய்க்கால் தெளிவாய் ஓடும் மிக அருகில்
வாய்ப்பு கிடைத்தால் போதும் ஓடுவோம் நீராட
வாய்க்காது அதுபோல் இன்று குளித்து மகிழ
வாயார வாழ்த்துவேன் வாய்க்காலை என்றும்

மை

பொதி சுமப்பது கழுதையின் முதற் கடமை
விதியை பழித்து முயலாமலிருப்பது முழு  மடமை
நதியில் எறிந்தும் மூழ்காதது தனி திறமைத்
சதிசெய்தாலென்றும் நேரும்  தீரா பகைமை
காலம் கடந்து மெல்ல வெல்வது வாய்மை
காலனிட மிருந்து நம்மை  காப்பது தூய்மை
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாவது தாய்மை
உயிர்களெல்லாம் வணங்கும் பராசக்தி பெண்மை
உயிர்த்துடிப்பாய் இருக்கும் விழிப்புணர்வே ஆண்மை
இவ்விருவரும் இணைதேயிருந்தால் இனிமை
தனிமனித சுதந்திரம் இருவருக்கும் சம உரிமை
அனைவர்க்கும் ஞானத்தை அளிப்பது தனிமை

Wednesday 30 November 2011

வண்ண வண்ண காதல்

நடந்து வந்தாள் என்னவள்
 நீல வண்ணப்  புடவையில் - சில்லென்றே
 மயக்கத்தில் மாதயை  நோக்க
சிவந்தது கன்னம் நாணத்தில்
வெள்ளை மனத்தால் வெளிபடுத்த இயலவில்லை
கன்னியிடம்  காதலை
பச்சையாய் பேசிவிடுமாறு நண்பர்கள் நச்சரிக்க - உடன்
கருத்தது முகம் கருத்தரித்தது மூர்க்கம் - அய்யோ
 வானவில்லாய் எங்காதல் வந்து வந்து போக
நொந்து மனம் வெம்பி
கானல்நீராய் ஆனது
என்னவளின் நினைவுகள் தன்னில்

கடவுளும் வரங்களும்

அகண்ட பேரண்டமே எனது வீடு
நட்சத்திர கூட்டங்கள் நண்பர்கள்
நிலவிலும் உள்ளது விலாசம்
பிரபஞ்சமே நீ பூமித்தாய் மீது
விண்கற்களை எறிந்தாலும்
சபிக்கமாட்டாள்   உன்னை
அணுக்கழிவுகளால் துளைத்தாலும்
சளைக்காமல் அலையடிக்கும்
கடலண்ணன் என்று இப்படி
பல சொந்தங்கள் எனக்கிருக்க
கடவுள் வந்து என்னிடம்
"வரங்கள் என்ன வேண்டும்"
என்று பரிவுடன் கேட்க
"மரங்கள் போன்ற பல
வரங்கள் உள்ளன எங்களிடம்
வாருங்கள் நீங்களும் பூமிக்கு
வருகை புரிந்து தாங்கள்
வருடங்கள் பல ஆகின்றனவே "
என்று நான் வினவினேன்
"அவதாரங்கள் பல எடுத்தேன்
அயோக்கியர்கள் சில பேரை
அழிக்க இன்றோ நல்லவர்கள்
சில பேரை காப்பாற்ற
பெரிய அவதாரங்கள் பல
எடுத்தும் முடியவில்லை
முற்றுபெறவில்லை முடிவில்லா
துன்பங்கள் வாழ்வில்"


Friday 4 November 2011

நெல்லையின் வளம் காப்போம்

நெல்லை சீமையிலே
நயினார் குளக்கரையிலே
நாள்தோறும் மிதிவண்டியிலும்
நடைபோட்டும் சென்ற
நல்ல காலங்கள்
ஓடிவிட்டன
தார் அதிகநாள்
தங்காத மண் சாலை
தங்கமாய் மின்னும்
நெல்மணிகள் ஒருபுறம்
பெருங்கடலென அலையுடன்
பெருமையாய் நயினார்குளம்
மறுபுறம் அழகு சேர்க்கும்


சுழன்று அடிக்கும்
காற்றில் மிதிமிதியென
மிதிவண்டியை மிதித்து
நதியென ஓடோடி
பள்ளிக்கடலை அடைவோம்
சிறார்களாய் நாங்கள்

குளத்தருகே வெயிலுக்கு
குடை பிடித்தாற்போல்
அழகிய ஆலமரமுண்டு
அதனடியில் மாடன்
கோவிலும் உண்டு
அருகில் வயலில்
உழுது களைத்து
விழுதுகள் அருகில்
இளைப்பாறுவார்கள்
உழவர்கள் சிலர்
மாடனை உருகி
தொழுவார்கள் பலர்
இப்படி காட்சிகள்
பல காணலாம்

இன்றோ வயல்வெளிகள்
இருண்டு விட்டன 
வீட்டுமனைகள் பெருக்கம்
கண்டு பயிர்களெல்லாம்
மருண்டு விட்டன 
எமது நீரின சொந்தங்கள்
வீடுகளாம் அழகிய
வாய்க்கால்கள் எல்லாம்
வறண்டு விட்டன
கழிவுநீர் கால்வாய்களாய்
மாறி விட்டன

கரை புரண்டோடும்
தாமிரபரணி அன்னை
நவீன துச்சாதனர்களால்
மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
நாணி குறுகி நிற்கிறாள்
காப்பாற்ற கண்ணபிரான்
கதைகளில்தான் வருவாரோ ?
குளங்கள் அழிந்து
குடியிருப்புகளாய் மாறிவிட்டன
மழைக்காலங்களில்
நீர் புகுந்துவிட்டதென
நிவாரணம் கேட்கிறார்கள்

நெல்லுக்கு சிவபெருமான்
வேலிபோட்டதாக புராணம்
சொல்வதுண்டு இனிவரும்
காலங்களில் நெல்லுமில்லை
வேலியுமில்லை நீருமில்லை
வேனற்காலம் மட்டும்
வாட்டும் நிலை
வாராமல் தடுக்க
வாலிபர்களே உடனே
இயற்கையை சுரண்டுவதை
தடுக்க போராடுவோம் வாரீர் !

Thursday 3 November 2011

பிள்ளைபிராயத்து காதல்

முல்லை அரும்பான
பிள்ளை பருவம்
கடந்து அவன்
அரும்பு மீசையும்
குறும்பு பார்வையும்
கரும்பின் சுவையான
கற்கண்டு பேச்சும்
பனித்துளியாய் முகம்
முழுதும் பருவத்தில்
வளரூக்கி விதைத்த
பருக்களும்
அவை முழுவதும்
நீங்கி முகம்தான்
வளவளவென்று
வாளிப்பாக மாற
ஏங்கி கண்ணாடி
முன்னே வெகுநேரம்
கடுந்தவம் புரிந்து
கடலைமாவும்
கட்டித்தையிரும்
கலந்து முகத்தில்
தேய்த்து கொள்வான்

சிகையலங்காரத்தை
சினிமா நட்சத்திரங்கள்
போல் பலவாறு
மாற்றி சிலிர்த்து
கொள்வான்
பெற்றோரை
எதிரியாய் பார்ப்பான்
நண்பர்கள் கடவுளாய்
தெரிவார்கள்

நங்கையின் கடைக்கண்
பார்வைக்கு எங்கும்
மனது காலநேரம்
தெரியாமல் தறிகெட்டு
ஓடும் பரிபோல்
தன்னை கதாநாயகனாய்
காட்ட கதைகட்டுரை
ஓவியம் கவிதை
பாடல் ஆடலென
திறமைகளை
பாவையர் முன்னே
வெளிப்படுத்தி
வெட்கத்துடன்
அவர்களின்
பாரட்டிற்கு
பரிதவிப்பான்

உலகமே
உன்னதமாய்
தோன்றும் வயது
ஆதாயம் பாராமல்
அனைவரிடமும்
அன்பு செலுத்துவான்

இவன் பிற்காலத்தில்
சாதனை புரிவான்
சொத்துக்கள் பல
சேர்ப்பான் பணத்தை
சம்பாதித்து குவிப்பான்
போன்ற எதிர்பார்ப்பு
இல்லாமல் இவனையும்
இளநங்கை ஒருத்தி
இதயத்தில் இருத்தி
காதல் புரிந்தாள்
வெள்ளை மனது
வெளிப்படுத்த
முடியவில்லை
பொருளாதார
நெருக்கடியில்
பாவம் அந்த
நடுத்தரக்
குடும்பத்தின்
பையன் மேலும்
படித்து உழைத்து
முன்னேற சென்றான்
அவளின் காதலை
புரிந்த கொண்ட
பொழுது அவளும்
இந்த உலகின்
சந்தர்ப்ப காதலில்
சிக்கி திருமணம்
செய்து கொண்டாள்
எல்லாம் சாதித்த
அவனின் மனது
ஏதோ ஒன்றிற்கு
ஏங்கி தவிக்குது
எதிர்பார்ப்பில்லா
அந்த தூய அன்பிற்கு ......




Tuesday 1 November 2011

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சம்மட்டியால் மிகவும் வேகமாக
நம்மை நாமே தாக்கிகொள்கிறோம்
சம்மங்கிபூவாய் இருந்த மனதில்
மாறாத தழும்புகளாய் பிரச்சனைகள்

சமரசம் செய்து பழியை நேர்த்தியாய்
பிறர் மேல் தூக்கி போடுகின்றோம்
சமமாய் இருந்த மனம் தனில்
பள்ளத்தாக்குகள் பல ஏற்படுத்திவிட்டோம்

வாழ்க்கையின் தொடரும் சோதனைகளால்
வழிமாறி செல்லும் நாம்
வாழைமரத்தின் தியாகத்தை
போற்றி புகழ வேண்டும் மனதால்
  
வாகை சூடி வெற்றி பெற முடியாததற்கு
பிறர் மேல் குறை கூறி நாம்
வாய்சொல்லில் வீரன் என்ற
பட்டதை வாங்க வேண்டாம்

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி
இவ்வாழ்க்கை அதனால்
நன்மையே பிறர்க்குசெய்து
நல்லதையே பார்ப்போம் எந்நாளும்

நன்றி எதிர்பாராது குறிப்பறிந்து
நல்லவை பிறர்க்கு செய்து
நலமுடன் வாழ நாளும்
சங்கல்பம் செய்வோம் சாதிப்போம்


   

Thursday 20 October 2011

தேகமும் மேகமும்

மோகத்தை கொன்று
தேகத்தை வென்ற
வேகத்தில் நான்
மேகத்தை பார்த்தேன்
மேகம் சொன்னது
"ஓ மனிதனே
உனது தேகமும்
என்னைபோன்றது
கடலிலிருந்து
நீராவியாய் எழுந்து
மேகமானேன்
மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து தென்றல்
தழுவியதும் மீண்டும்
மழையாய் மாறி
கடலில் கலக்கிறேன்
நீயும் இவ்வுலகில்
பரமாத்மாவிடம்
இருந்து தேகத்தில்
ஆவியாய் இணைந்து
இன்ப துன்பங்கள்
வெற்றிதோல்விகள்
ஆகிய மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து மரணத்தை
தழுவியதும்
ஆன்மா கடவுளை
மீண்டும் அடைகிறது"
மனது சாந்தமானது
உலகில் உள்ள
உயிர்கள் உள்ளே
உறைந்திருப்பது
பரம்பொருளே!

Wednesday 19 October 2011

குழந்தை தொழிலாளர்கள்

சிரித்து மகிழ்ந்து
சிந்தை தெளிந்து
பள்ளி செல்லும்
பாங்கை மறந்து
செல்ல சிறார்கள்
செய்கிறார்கள் பணி
செல்லும் இடமெல்லாம்

கண்கள் குளமாகி
மனது ரணமாகி
இதயம் கணமானது
இதை தடுக்க
சட்டங்கள் போட்டும் 
சரிவரவில்லை
திட்டங்கள் போடும்
அரசாங்கம் பிள்ளைகள்
பட்டங்கள் வாங்க
வழி செய்ய வேண்டும்

வறுமை அருகி
வளங்கள் பெருகி
நலங்கள் பெற்று
நாளும் பிள்ளைகள்
பள்ளிகள் சென்று
பாங்குடன் படித்திட
பங்காற்றுவோம்
பணிவன்புடன்

Monday 17 October 2011

பாரதி

கடையத்தில் கண்டேன்
பாரதி வாழ்ந்த வீட்டை
தடையேதும் இல்லாது
கவிதை மழை பொழிய
குடையேதும் இல்லாது
மக்கள் அதில் நனைய
சொற்கள் அருவியாய்
என் மனதில் கொட்டிட
கடைக்கோடி அடியேன்
தொழுதேன் கண்ணீர்
மல்க

பாரதியே நீ கவிதைகளை
காகிதத்தில் எழுதவில்லை
அன்பெனும் எழுதுகோலால்
அறிவெனும் மைகொண்டு
அண்டசராசரங்களில்
பதித்திருகிறாய் அதனால்
காலத்தையும் கடந்து
இளமையாய் ஒளிர்கிறது
உனது படைப்புகள்

Tuesday 11 October 2011

நினைவுகள்

என்னவளே உனது
நினைவுகள் எனது
மனதில் ஓயாது
கடலலையாய்....
உடலைவிட்டு ஆவி
பிரிந்தாலும் மீண்டும்
மழையாய் மாறி
எண்ணக்கடலில்
உனது நினைவுகளில்
மூழ்குவேன்

Tuesday 27 September 2011

கண்ணீர் சிறந்தது

துன்பத்தின் உச்சத்தில் உதிரும் கண்ணீர் சிறந்தது (அதை)
துடைக்க வருவோர் உதிர்க்கும் கண்ணீரும் சிறந்தது
துவளாமல் உழைத்த களிப்பின் கண்ணீர் சிறந்தது
துள்ளும் மனதின் ஊற்றின் உற்சாக  கண்ணீர் சிறந்தது

காதலின் வெளிப்பாட்டில் கசிந்துருகும் கண்ணீர் சிறந்தது
காமத்தின் உச்சத்தில் சாந்தமாய்வரும் கண்ணீர் சிறந்தது
காதலின் தோல்வியில் ரணமாய் வரும் கண்ணீர் சிறந்தது
மோகத்தை மூடி வைத்து மனதைமுட்டும் கண்ணீர் சிறந்தது

வானத்தின் அழுகையாம் மேகத்தின் கண்ணீர் சிறந்தது
கானத்தின் மேன்மையால் சிந்தும் கண்ணீரும் சிறந்தது
ஊனத்தை வென்ற களிப்பின்  உன்னத கண்ணீர் சிறந்தது
மோனத்தின் ஆழத்தில் அன்பின் ஆனந்த கண்ணீர் சிறந்தது

உவகை கண்ணீரென இரு துருவங்களுக்கிடையே
உருண்டோடிக்கொண்டிருப்பதே இவ்வாழ்க்கை இதில்
உலகத்தில் உவகைமட்டும் உன்னதமென்று மிக
உரைப்பவர் கண்ணீரின் மகிமை அறியாதவர் .


Monday 5 September 2011

தன்முனைப்பு

தன்முனைப்பை தவிர்க்க முடியவில்லை தவிக்கிறேன்
ஆணவத்தை அடக்க முடியவில்லை ஆண்டாண்டுகாலமாய்
எளிமையான எழையிடமும் ஒளிந்துகொண்டிருக்கிறாய்
வளமையான செல்வர்களிடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
பழமையான முதியோருடன் பகட்டாய் பதிந்திருக்கிறாய்
இளமையான சிறார்களிடம் சிரித்து கொண்டிருக்கிறாய்
ஆட்சியாளரின் தலைதனில் தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
மெய்சாட்சியாய் மனம்தனில் திகழந்து சாதனைகளை
பொய்காட்சியாய் எண்ணத்திரையில் வரைந்து சோதிக்கிறாய்
மாட்சிமையான ஞானம்தனை சிதைத்து விடுகிறாய்


ஆணவம்

ஆணவம் என்பது ஆமையை போன்றது கண்டீர்
ஆதாயம் பிறர்க்கு செய்யும் போதும் மெல்ல
ஆழமாய் நுழைந்து விடும் தழைத்து விடும்
ஆற்றொன்னா நோயாய் மனதில் பதிந்து விடும்
சேவைகள் பல மக்களுக்கு செய்வேனென்று பலர்
தேவைகள்தான் அறியாது வீண் வெகுமதிகள் கொடுத்து
நாவை அடக்காது நால்வித கருத்துக்களை நவின்று
சாவைத்தான் அடைவார்கள் கடைசியில் வெறுத்து
புண்ணியங்கள் செய்கிறோம் என்ற நினைப்பினில்
புளகாங்கிதத்துடன் ஆணவமெனும் போதையில்
புரியாமல் தீயவர்களை தழைக்க வைக்கிறார்கள்
புன்செயல்கள் புரிபவர்களை பிழைக்க செய்கிறார்கள்


Tuesday 23 August 2011

வேள்விகளாய் கேள்விகள்

கொட்டும் அருவியிடம்
பட்டென்று ஓர்கேள்வி
கேட்டேன் "ஏனிப்படி
ஓயாமல் விழுந்தோடி
கொண்டிருக்கிறாய் ! "
பட்டும்படாமலும் பதில்
வந்தது
"ஓ மனிதனே! நீங்கள்தாம்
பலனை எதிர்பார்த்து
பணிகள் செய்வீர்கள்
எங்கள் நீர்வீழ்ச்சி
தங்கள் மன மகிழ்ச்சி"
என்றது நல்லருவி.

தாமரையிடம் கேட்டேன்
தரமான ஓர் கேள்வி
"தாங்களை ஆதவன்
தழுவியதும் மலர்வது
எதற்காக ? "
தாமதமின்றி உடனே
தாமரை நவின்றது
"மட்டற்ற மகிழ்ச்சியில்
மலர்கிறேன் மணத்துடன்
காரணமின்றி காரியமாற்றும்
உதாரணம் யான் "


"ரோசாப்பூவே முள்ளுடன்
மலர்வது எதற்காக என்றேன் ?"
"உனது மனது போன்றவள் 
யான் துன்பமுட்கள்
துளைக்கும் போதும் இன்பத்தில்
திளைக்க இன்ப இதழ்கள்
தளைத்து விரிந்து பரிவுடன்
வருடுதல் போல் மலர்கிறேன்"
என்றது ரோசாப்பூ கனிவுடன்.

மேகத்திடம் ஞான
தாகத்துடன் கேட்டேன்
"நீவீர் நீரைப் பொழிவது
எதற்காக ? "
"முன்பு முற்போகம் விளைய
முழுமையாய் உயிர்கள் எலாம்
இன்புற்றிருக்க உள்ளத்தின்
கருணையில் காரணமின்றி
கண்ணீர் வருவது போல்
தண்ணீர் மழை பொழிந்தேன்
இன்றோ இயற்கையை
சுரண்டி பூமியன்னையை
தோண்டி மணல்குழந்தைகளை
விற்கும் கெட்ட மனிதர்களை
எண்ணி உள்ளம் குமுற
புயல் மழையாய் கொட்டுகிறேன் "
என்றது மேகங்கள்.

இப்படி யான் பல கேள்விகளை
இயற்கையிடம் கேட்க அதுவும்
பதில்களை அளிக்க கேள்விகளின்
ஆழமோ அதிகரிக்க பதில்கள் தாம்
மௌனக்கடலில் மூழ்கியது.



Sunday 21 August 2011

வாழ்க்கை

வாழ்க்கை என்ன பெரிய மந்திரமோ ?
வளவளவென்று அர்த்தங்கள் புரிய வில்லை

வாழ்க்கை என்ன ராஜதந்திரமோ?
வளமுடன் வாழ்வது நரிகள் மட்டும் தானோ?

வாழ்க்கை என்ன எந்திரமோ ?
வழக்கமாய் செய்வதையே திரும்ப செய்யவதால்?

வாழ்க்கை என்ன பெருங்கனவோ ?
கனவிலும் கனவு காண்கிறோம் என்பதனால்

வாழ்க்கை என்ன பெருங்காயமோ?
காயம் அழிந்தாலும் எண்ணமாயமாய் மணக்குமோ?

வாழ்க்கை என்ன பெருக்களோ?
வான்வரை நமது மக்கள் தொகை பெருகுவதால்!
  

Tuesday 16 August 2011

கவிஞர்கள்

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்
ஏழை வீட்டு அடுப்புக்கரியும் கவிப்பாடுவேன்
சிறுவன் யான் தவறிருந்தால் மன்னியுங்கள்
தருவேன் நல்ல கவிதையாய் நம்புங்கள்

கார்மேகமாய் கவிதை மழை பொழிய
கனிவுடனே அதில் அடியேன் நனைய
கால்களும் அழகு சந்ததிற்கு நடம்புரிய
கலந்தேன் கருத்தில் எண்ணங்கள் தெளிய

வானத்திற்கு ஒப்பாக கவி வடிக்கும்
கவிவாணர்காள் மயக்கும் தங்கள்
வார்த்தை வீச்சும் செந்தமிழ் பேச்சும்
வாடிய பயிரையும் உயிர்பிக்கும் மூச்சு

கவிப்பாடும் திறன் எங்கிருந்து வந்தது
கவிஞர்களின் ஊன் உயிரிலும் கலந்தது
கவிப்பாடி நான் எழுத்துவதற்கு சிறந்த
எழுதுகோல் தருக தொழுது கவியெழுத

Sunday 14 August 2011

திருமணம்

திருமணம் ஒரு
பெருஞ்சிறை என்ற
தெளிந்தோர் வாக்கு 
உண்மையென்று யான்
உணர்ந்திட்டேன் இன்று

"சுதந்திரம் பறி
நிரந்தரமாய்" இது
இன்றுலகில் எல்லா
திருமணத்தின் சிறை
மந்திரம் காணீர் !

ஆயுட்தண்டனை இது
ஆனந்தத்தை கெட்ட
ஆணவத்தால் உடன்
அழித்துவிடும் நம்மை
முடக்கி விடும் கண்டீர் !

குறியொன்றும் இல்லாது
குறிப்பறிந்து உதவாமல்
குதூகலத்தை போக்கி
கூனி குறுகிட செய்யும்
குதர்க்கமாய் திருமணம்


Saturday 13 August 2011

கவிதை எழுத முயற்சி

செந்தமிழில் எளிமையாய் கவிதை
எனக்கு எழுத தெரியாது
சந்தத்துடன் நயனமாய்
பாடல் இயற்ற தெரியாது
எனினும் தமிழ்
சொந்தங்கள் பெருமையாய் மனதில்
எனது கவிதையை அவர்கள்
பந்தங்களுடன் பொறுமையாய்
படித்திட வேண்டும் என்றும்

பைந்தமிழில் பாங்குடன்
பாக்கள் பலநூறுவடித்திட
பைம்பொழிலில் தருவின் நிழலில்
பூக்கள் எனை வருடிட பையவே
எனைசூழ்ந்த தருணங்களின் சாயல்மிக நெருடிட
எண்ணச்சுழலில் எழுந்து
கண்ணீராய் பொழிந்தது கவிதை

விடாது வார்த்தைகளை துரத்திட
கண்களிரண்டும் வலித்திட
மூடா இமைகள் விரல்களிடம்
"ஏதாவது எழுதுஎன" துடித்திட
படாத பாடு பட்டு மூளையின்
ஆணைக் கிணங்க வெடித்து
சடாரென்று உதித்தது
ஆதவனாய் கவிதை என்னில்

ஒளிந்து கிடக்குது கவிதைகள்
பற்பல பிரபஞ்சத்தில்- மனம்
தெளிந்து கிடைக்குது எண்ணங்கள்
கவிதை இயற்றிட நலிந்து
கிடந்த யான் தாமரையாய்
மலர்ந்து கவித்தேன் வழிந்து
ஓடுகிறது எனது
இதயகமலத்திருந்து ஆறாய்