Tuesday 23 August 2011

வேள்விகளாய் கேள்விகள்

கொட்டும் அருவியிடம்
பட்டென்று ஓர்கேள்வி
கேட்டேன் "ஏனிப்படி
ஓயாமல் விழுந்தோடி
கொண்டிருக்கிறாய் ! "
பட்டும்படாமலும் பதில்
வந்தது
"ஓ மனிதனே! நீங்கள்தாம்
பலனை எதிர்பார்த்து
பணிகள் செய்வீர்கள்
எங்கள் நீர்வீழ்ச்சி
தங்கள் மன மகிழ்ச்சி"
என்றது நல்லருவி.

தாமரையிடம் கேட்டேன்
தரமான ஓர் கேள்வி
"தாங்களை ஆதவன்
தழுவியதும் மலர்வது
எதற்காக ? "
தாமதமின்றி உடனே
தாமரை நவின்றது
"மட்டற்ற மகிழ்ச்சியில்
மலர்கிறேன் மணத்துடன்
காரணமின்றி காரியமாற்றும்
உதாரணம் யான் "


"ரோசாப்பூவே முள்ளுடன்
மலர்வது எதற்காக என்றேன் ?"
"உனது மனது போன்றவள் 
யான் துன்பமுட்கள்
துளைக்கும் போதும் இன்பத்தில்
திளைக்க இன்ப இதழ்கள்
தளைத்து விரிந்து பரிவுடன்
வருடுதல் போல் மலர்கிறேன்"
என்றது ரோசாப்பூ கனிவுடன்.

மேகத்திடம் ஞான
தாகத்துடன் கேட்டேன்
"நீவீர் நீரைப் பொழிவது
எதற்காக ? "
"முன்பு முற்போகம் விளைய
முழுமையாய் உயிர்கள் எலாம்
இன்புற்றிருக்க உள்ளத்தின்
கருணையில் காரணமின்றி
கண்ணீர் வருவது போல்
தண்ணீர் மழை பொழிந்தேன்
இன்றோ இயற்கையை
சுரண்டி பூமியன்னையை
தோண்டி மணல்குழந்தைகளை
விற்கும் கெட்ட மனிதர்களை
எண்ணி உள்ளம் குமுற
புயல் மழையாய் கொட்டுகிறேன் "
என்றது மேகங்கள்.

இப்படி யான் பல கேள்விகளை
இயற்கையிடம் கேட்க அதுவும்
பதில்களை அளிக்க கேள்விகளின்
ஆழமோ அதிகரிக்க பதில்கள் தாம்
மௌனக்கடலில் மூழ்கியது.



Sunday 21 August 2011

வாழ்க்கை

வாழ்க்கை என்ன பெரிய மந்திரமோ ?
வளவளவென்று அர்த்தங்கள் புரிய வில்லை

வாழ்க்கை என்ன ராஜதந்திரமோ?
வளமுடன் வாழ்வது நரிகள் மட்டும் தானோ?

வாழ்க்கை என்ன எந்திரமோ ?
வழக்கமாய் செய்வதையே திரும்ப செய்யவதால்?

வாழ்க்கை என்ன பெருங்கனவோ ?
கனவிலும் கனவு காண்கிறோம் என்பதனால்

வாழ்க்கை என்ன பெருங்காயமோ?
காயம் அழிந்தாலும் எண்ணமாயமாய் மணக்குமோ?

வாழ்க்கை என்ன பெருக்களோ?
வான்வரை நமது மக்கள் தொகை பெருகுவதால்!
  

Tuesday 16 August 2011

கவிஞர்கள்

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்
ஏழை வீட்டு அடுப்புக்கரியும் கவிப்பாடுவேன்
சிறுவன் யான் தவறிருந்தால் மன்னியுங்கள்
தருவேன் நல்ல கவிதையாய் நம்புங்கள்

கார்மேகமாய் கவிதை மழை பொழிய
கனிவுடனே அதில் அடியேன் நனைய
கால்களும் அழகு சந்ததிற்கு நடம்புரிய
கலந்தேன் கருத்தில் எண்ணங்கள் தெளிய

வானத்திற்கு ஒப்பாக கவி வடிக்கும்
கவிவாணர்காள் மயக்கும் தங்கள்
வார்த்தை வீச்சும் செந்தமிழ் பேச்சும்
வாடிய பயிரையும் உயிர்பிக்கும் மூச்சு

கவிப்பாடும் திறன் எங்கிருந்து வந்தது
கவிஞர்களின் ஊன் உயிரிலும் கலந்தது
கவிப்பாடி நான் எழுத்துவதற்கு சிறந்த
எழுதுகோல் தருக தொழுது கவியெழுத

Sunday 14 August 2011

திருமணம்

திருமணம் ஒரு
பெருஞ்சிறை என்ற
தெளிந்தோர் வாக்கு 
உண்மையென்று யான்
உணர்ந்திட்டேன் இன்று

"சுதந்திரம் பறி
நிரந்தரமாய்" இது
இன்றுலகில் எல்லா
திருமணத்தின் சிறை
மந்திரம் காணீர் !

ஆயுட்தண்டனை இது
ஆனந்தத்தை கெட்ட
ஆணவத்தால் உடன்
அழித்துவிடும் நம்மை
முடக்கி விடும் கண்டீர் !

குறியொன்றும் இல்லாது
குறிப்பறிந்து உதவாமல்
குதூகலத்தை போக்கி
கூனி குறுகிட செய்யும்
குதர்க்கமாய் திருமணம்


Saturday 13 August 2011

கவிதை எழுத முயற்சி

செந்தமிழில் எளிமையாய் கவிதை
எனக்கு எழுத தெரியாது
சந்தத்துடன் நயனமாய்
பாடல் இயற்ற தெரியாது
எனினும் தமிழ்
சொந்தங்கள் பெருமையாய் மனதில்
எனது கவிதையை அவர்கள்
பந்தங்களுடன் பொறுமையாய்
படித்திட வேண்டும் என்றும்

பைந்தமிழில் பாங்குடன்
பாக்கள் பலநூறுவடித்திட
பைம்பொழிலில் தருவின் நிழலில்
பூக்கள் எனை வருடிட பையவே
எனைசூழ்ந்த தருணங்களின் சாயல்மிக நெருடிட
எண்ணச்சுழலில் எழுந்து
கண்ணீராய் பொழிந்தது கவிதை

விடாது வார்த்தைகளை துரத்திட
கண்களிரண்டும் வலித்திட
மூடா இமைகள் விரல்களிடம்
"ஏதாவது எழுதுஎன" துடித்திட
படாத பாடு பட்டு மூளையின்
ஆணைக் கிணங்க வெடித்து
சடாரென்று உதித்தது
ஆதவனாய் கவிதை என்னில்

ஒளிந்து கிடக்குது கவிதைகள்
பற்பல பிரபஞ்சத்தில்- மனம்
தெளிந்து கிடைக்குது எண்ணங்கள்
கவிதை இயற்றிட நலிந்து
கிடந்த யான் தாமரையாய்
மலர்ந்து கவித்தேன் வழிந்து
ஓடுகிறது எனது
இதயகமலத்திருந்து ஆறாய்