Monday 25 March 2013

பேரிளம்பெண்

தாவணி அழகாயுடுத்தி
தாய்மாமன் சீதனத்துடன்
பூப்பெய்திய எந்தனை
மூப்பெய்திய பெரியோர்கள்
வாழ்த்தினர்  வாழ்கவென்று

இளநிலை பட்டம்பெற
இளநங்கை யான் துடிப்புடன்
வரைமுறைகள் விதிக்கப்பட்டு
அறிவுரைகளுடன் சென்றேன்
கல்லூரி தனக்கு

கடைக்கண்னால் பாராமல்
 காளைகளை  கவராமல்
நடையிலும் உடையிலும்
நளினமின்றி எந்திரமாய்
சுற்றி திரிந்தேன்

சோதனை வந்தது  வாழ்வில்
சோதிடன் வடிவினில்  
சாதகத்தில் கோளாறு
என்றுரைத்து
பாதகம் புரிந்தான் பாவி எனக்கு

முதுநிலை பட்டத்திற்கு
முழுமனதுடன் சட்டதிட்டங்கள்
போட்ட பெற்றோர் சொல்
கேட்டு முழுமை பெற்றேன்
வாகை சூடினேன்

பருவத்திலே ஏற்படும் மாற்றம்
உருவத்தில் மட்டும் வந்தது
உள்ளத்தில் சின்னஞ்சிறு
குழந்தையென வாழ்ந்தேன்
குதூகலத்துடன்

பெற்றோரே சந்தேகமாய்
உற்றார் சொல்கேட்டு
கற்றோறேன்பதை
மறந்து கேள்விகளால்
துளைக்கிறார் நிதமும்

முதிர்கன்னி பட்டம் பெற்றும்
முகத்தில் புன்னகையுடன்
ஆண்டாளாய் தவத்தில்
ஆழ்ந்திருக்கிறேன்
கண்ணன் ஒருநாள்
ஆட்கொள்வான் எனையென்று ..