Thursday 15 December 2011

எங்கள் வீடு

தென்றலிலே தவழ்ந்து வரும் மலரின் வாசம்
தெவிட்டாத கனியின் சுவை தாயின் நேசம்
தென்னையின் கள்ளமிலா உயர்ந்தோங்கிய பாசம்
தெற்குமூலையில் செம்பருத்தி கதைகள் பேசும்

முற்றத்தில் முத்தாய்ப்பாய் முருங்கை மரம்
சுற்றத்தின் அன்பும் கருணையும் எங்கள் வரம்
குற்றத்தை மன்னிப்போம் என்றும் பல தரம்
வருகை புரியுங்கள் எங்கள் வீட்டிற்கு ஒருதரம்

சாணம் மெழுகிய வாசல் பளபளக்கும் - அதில்
வானம் பார்த்து பூக்கள் பல மினுமினுக்கும்
காணம்பாடி காக்கைகுருவிகள் முனுமுனுக்கும்
தானியங்கள் தின்று நீரருந்தி சலசலக்கும்

வாய்க்கால் தெளிவாய் ஓடும் மிக அருகில்
வாய்ப்பு கிடைத்தால் போதும் ஓடுவோம் நீராட
வாய்க்காது அதுபோல் இன்று குளித்து மகிழ
வாயார வாழ்த்துவேன் வாய்க்காலை என்றும்

No comments:

Post a Comment