Friday 4 November 2011

நெல்லையின் வளம் காப்போம்

நெல்லை சீமையிலே
நயினார் குளக்கரையிலே
நாள்தோறும் மிதிவண்டியிலும்
நடைபோட்டும் சென்ற
நல்ல காலங்கள்
ஓடிவிட்டன
தார் அதிகநாள்
தங்காத மண் சாலை
தங்கமாய் மின்னும்
நெல்மணிகள் ஒருபுறம்
பெருங்கடலென அலையுடன்
பெருமையாய் நயினார்குளம்
மறுபுறம் அழகு சேர்க்கும்


சுழன்று அடிக்கும்
காற்றில் மிதிமிதியென
மிதிவண்டியை மிதித்து
நதியென ஓடோடி
பள்ளிக்கடலை அடைவோம்
சிறார்களாய் நாங்கள்

குளத்தருகே வெயிலுக்கு
குடை பிடித்தாற்போல்
அழகிய ஆலமரமுண்டு
அதனடியில் மாடன்
கோவிலும் உண்டு
அருகில் வயலில்
உழுது களைத்து
விழுதுகள் அருகில்
இளைப்பாறுவார்கள்
உழவர்கள் சிலர்
மாடனை உருகி
தொழுவார்கள் பலர்
இப்படி காட்சிகள்
பல காணலாம்

இன்றோ வயல்வெளிகள்
இருண்டு விட்டன 
வீட்டுமனைகள் பெருக்கம்
கண்டு பயிர்களெல்லாம்
மருண்டு விட்டன 
எமது நீரின சொந்தங்கள்
வீடுகளாம் அழகிய
வாய்க்கால்கள் எல்லாம்
வறண்டு விட்டன
கழிவுநீர் கால்வாய்களாய்
மாறி விட்டன

கரை புரண்டோடும்
தாமிரபரணி அன்னை
நவீன துச்சாதனர்களால்
மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
நாணி குறுகி நிற்கிறாள்
காப்பாற்ற கண்ணபிரான்
கதைகளில்தான் வருவாரோ ?
குளங்கள் அழிந்து
குடியிருப்புகளாய் மாறிவிட்டன
மழைக்காலங்களில்
நீர் புகுந்துவிட்டதென
நிவாரணம் கேட்கிறார்கள்

நெல்லுக்கு சிவபெருமான்
வேலிபோட்டதாக புராணம்
சொல்வதுண்டு இனிவரும்
காலங்களில் நெல்லுமில்லை
வேலியுமில்லை நீருமில்லை
வேனற்காலம் மட்டும்
வாட்டும் நிலை
வாராமல் தடுக்க
வாலிபர்களே உடனே
இயற்கையை சுரண்டுவதை
தடுக்க போராடுவோம் வாரீர் !

1 comment:

  1. The following lines are really nice and true
    கரை புரண்டோடும்
    தாமிரபரணி அன்னை
    நவீன துச்சாதனர்களால்
    மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
    நாணி குறுகி நிற்கிறாள்
    காப்பாற்ற கண்ணபிரான்
    கதைகளில்தான் வருவாரோ ?
    குளங்கள் அழிந்து
    குடியிருப்புகளாய் மாறிவிட்டன
    மழைக்காலங்களில்
    நீர் புகுந்துவிட்டதென
    நிவாரணம் கேட்கிறார்கள்
    see this link for a similar feelings www.godson-mindinmind.blogspot.com

    ReplyDelete