Wednesday 30 November 2011

வண்ண வண்ண காதல்

நடந்து வந்தாள் என்னவள்
 நீல வண்ணப்  புடவையில் - சில்லென்றே
 மயக்கத்தில் மாதயை  நோக்க
சிவந்தது கன்னம் நாணத்தில்
வெள்ளை மனத்தால் வெளிபடுத்த இயலவில்லை
கன்னியிடம்  காதலை
பச்சையாய் பேசிவிடுமாறு நண்பர்கள் நச்சரிக்க - உடன்
கருத்தது முகம் கருத்தரித்தது மூர்க்கம் - அய்யோ
 வானவில்லாய் எங்காதல் வந்து வந்து போக
நொந்து மனம் வெம்பி
கானல்நீராய் ஆனது
என்னவளின் நினைவுகள் தன்னில்

கடவுளும் வரங்களும்

அகண்ட பேரண்டமே எனது வீடு
நட்சத்திர கூட்டங்கள் நண்பர்கள்
நிலவிலும் உள்ளது விலாசம்
பிரபஞ்சமே நீ பூமித்தாய் மீது
விண்கற்களை எறிந்தாலும்
சபிக்கமாட்டாள்   உன்னை
அணுக்கழிவுகளால் துளைத்தாலும்
சளைக்காமல் அலையடிக்கும்
கடலண்ணன் என்று இப்படி
பல சொந்தங்கள் எனக்கிருக்க
கடவுள் வந்து என்னிடம்
"வரங்கள் என்ன வேண்டும்"
என்று பரிவுடன் கேட்க
"மரங்கள் போன்ற பல
வரங்கள் உள்ளன எங்களிடம்
வாருங்கள் நீங்களும் பூமிக்கு
வருகை புரிந்து தாங்கள்
வருடங்கள் பல ஆகின்றனவே "
என்று நான் வினவினேன்
"அவதாரங்கள் பல எடுத்தேன்
அயோக்கியர்கள் சில பேரை
அழிக்க இன்றோ நல்லவர்கள்
சில பேரை காப்பாற்ற
பெரிய அவதாரங்கள் பல
எடுத்தும் முடியவில்லை
முற்றுபெறவில்லை முடிவில்லா
துன்பங்கள் வாழ்வில்"


Friday 4 November 2011

நெல்லையின் வளம் காப்போம்

நெல்லை சீமையிலே
நயினார் குளக்கரையிலே
நாள்தோறும் மிதிவண்டியிலும்
நடைபோட்டும் சென்ற
நல்ல காலங்கள்
ஓடிவிட்டன
தார் அதிகநாள்
தங்காத மண் சாலை
தங்கமாய் மின்னும்
நெல்மணிகள் ஒருபுறம்
பெருங்கடலென அலையுடன்
பெருமையாய் நயினார்குளம்
மறுபுறம் அழகு சேர்க்கும்


சுழன்று அடிக்கும்
காற்றில் மிதிமிதியென
மிதிவண்டியை மிதித்து
நதியென ஓடோடி
பள்ளிக்கடலை அடைவோம்
சிறார்களாய் நாங்கள்

குளத்தருகே வெயிலுக்கு
குடை பிடித்தாற்போல்
அழகிய ஆலமரமுண்டு
அதனடியில் மாடன்
கோவிலும் உண்டு
அருகில் வயலில்
உழுது களைத்து
விழுதுகள் அருகில்
இளைப்பாறுவார்கள்
உழவர்கள் சிலர்
மாடனை உருகி
தொழுவார்கள் பலர்
இப்படி காட்சிகள்
பல காணலாம்

இன்றோ வயல்வெளிகள்
இருண்டு விட்டன 
வீட்டுமனைகள் பெருக்கம்
கண்டு பயிர்களெல்லாம்
மருண்டு விட்டன 
எமது நீரின சொந்தங்கள்
வீடுகளாம் அழகிய
வாய்க்கால்கள் எல்லாம்
வறண்டு விட்டன
கழிவுநீர் கால்வாய்களாய்
மாறி விட்டன

கரை புரண்டோடும்
தாமிரபரணி அன்னை
நவீன துச்சாதனர்களால்
மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
நாணி குறுகி நிற்கிறாள்
காப்பாற்ற கண்ணபிரான்
கதைகளில்தான் வருவாரோ ?
குளங்கள் அழிந்து
குடியிருப்புகளாய் மாறிவிட்டன
மழைக்காலங்களில்
நீர் புகுந்துவிட்டதென
நிவாரணம் கேட்கிறார்கள்

நெல்லுக்கு சிவபெருமான்
வேலிபோட்டதாக புராணம்
சொல்வதுண்டு இனிவரும்
காலங்களில் நெல்லுமில்லை
வேலியுமில்லை நீருமில்லை
வேனற்காலம் மட்டும்
வாட்டும் நிலை
வாராமல் தடுக்க
வாலிபர்களே உடனே
இயற்கையை சுரண்டுவதை
தடுக்க போராடுவோம் வாரீர் !

Thursday 3 November 2011

பிள்ளைபிராயத்து காதல்

முல்லை அரும்பான
பிள்ளை பருவம்
கடந்து அவன்
அரும்பு மீசையும்
குறும்பு பார்வையும்
கரும்பின் சுவையான
கற்கண்டு பேச்சும்
பனித்துளியாய் முகம்
முழுதும் பருவத்தில்
வளரூக்கி விதைத்த
பருக்களும்
அவை முழுவதும்
நீங்கி முகம்தான்
வளவளவென்று
வாளிப்பாக மாற
ஏங்கி கண்ணாடி
முன்னே வெகுநேரம்
கடுந்தவம் புரிந்து
கடலைமாவும்
கட்டித்தையிரும்
கலந்து முகத்தில்
தேய்த்து கொள்வான்

சிகையலங்காரத்தை
சினிமா நட்சத்திரங்கள்
போல் பலவாறு
மாற்றி சிலிர்த்து
கொள்வான்
பெற்றோரை
எதிரியாய் பார்ப்பான்
நண்பர்கள் கடவுளாய்
தெரிவார்கள்

நங்கையின் கடைக்கண்
பார்வைக்கு எங்கும்
மனது காலநேரம்
தெரியாமல் தறிகெட்டு
ஓடும் பரிபோல்
தன்னை கதாநாயகனாய்
காட்ட கதைகட்டுரை
ஓவியம் கவிதை
பாடல் ஆடலென
திறமைகளை
பாவையர் முன்னே
வெளிப்படுத்தி
வெட்கத்துடன்
அவர்களின்
பாரட்டிற்கு
பரிதவிப்பான்

உலகமே
உன்னதமாய்
தோன்றும் வயது
ஆதாயம் பாராமல்
அனைவரிடமும்
அன்பு செலுத்துவான்

இவன் பிற்காலத்தில்
சாதனை புரிவான்
சொத்துக்கள் பல
சேர்ப்பான் பணத்தை
சம்பாதித்து குவிப்பான்
போன்ற எதிர்பார்ப்பு
இல்லாமல் இவனையும்
இளநங்கை ஒருத்தி
இதயத்தில் இருத்தி
காதல் புரிந்தாள்
வெள்ளை மனது
வெளிப்படுத்த
முடியவில்லை
பொருளாதார
நெருக்கடியில்
பாவம் அந்த
நடுத்தரக்
குடும்பத்தின்
பையன் மேலும்
படித்து உழைத்து
முன்னேற சென்றான்
அவளின் காதலை
புரிந்த கொண்ட
பொழுது அவளும்
இந்த உலகின்
சந்தர்ப்ப காதலில்
சிக்கி திருமணம்
செய்து கொண்டாள்
எல்லாம் சாதித்த
அவனின் மனது
ஏதோ ஒன்றிற்கு
ஏங்கி தவிக்குது
எதிர்பார்ப்பில்லா
அந்த தூய அன்பிற்கு ......




Tuesday 1 November 2011

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சம்மட்டியால் மிகவும் வேகமாக
நம்மை நாமே தாக்கிகொள்கிறோம்
சம்மங்கிபூவாய் இருந்த மனதில்
மாறாத தழும்புகளாய் பிரச்சனைகள்

சமரசம் செய்து பழியை நேர்த்தியாய்
பிறர் மேல் தூக்கி போடுகின்றோம்
சமமாய் இருந்த மனம் தனில்
பள்ளத்தாக்குகள் பல ஏற்படுத்திவிட்டோம்

வாழ்க்கையின் தொடரும் சோதனைகளால்
வழிமாறி செல்லும் நாம்
வாழைமரத்தின் தியாகத்தை
போற்றி புகழ வேண்டும் மனதால்
  
வாகை சூடி வெற்றி பெற முடியாததற்கு
பிறர் மேல் குறை கூறி நாம்
வாய்சொல்லில் வீரன் என்ற
பட்டதை வாங்க வேண்டாம்

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி
இவ்வாழ்க்கை அதனால்
நன்மையே பிறர்க்குசெய்து
நல்லதையே பார்ப்போம் எந்நாளும்

நன்றி எதிர்பாராது குறிப்பறிந்து
நல்லவை பிறர்க்கு செய்து
நலமுடன் வாழ நாளும்
சங்கல்பம் செய்வோம் சாதிப்போம்