Monday 28 January 2013

எங்குசென்றாயோ ?

உலகெனும் நாடக மேடையில் ஆடி
களைத்து சோர்ந்த போன என்னை
களங்கமில்லா என்னவளே உன்
மடியில் கண்ணுறங்க செய்தாய்

கதகதப்பாய் உன் உள்ளங்கை
வெப்பம் என் கைகளில் பரவி
நாணும் உன் அழகு கண்கள் -வழி
வெளிப்படும் காதல் கனலாய்

இதழ்கள் இரண்டையும் ஒன்றாக்கி
இதயத்தை ராகங்களின் ஊற்றாக்கி
மூளை மடிப்புகளில் பாய்ந்தோட
என் முகத்திற்கு பொலிவு தந்தாய்

தோல்வியில் தலைகுனியும் போது
தோள்களை தந்தாய் தலைசாய்க்க
வருந்தும் மனதிற்கு மருந்தாய்
இருந்து துவளாமல் தடுத்தாய்

இத்தனையும் செய்துவிட்டு இனியவளே
பித்தனைப்போல் எனை புலம்பவைத்து
இத்தனை காலங்கள் எங்குசென்றாயோ ?
என்று காண்பேனோ உன்னை யான் ?

Sunday 6 January 2013

சாக்காடு

சாவும் சாத்தானும் சரிசமமோ ?
இரண்டையும் 
விரும்புவோர் இல்லை 
உலகத்தில் எனினும் 
ஆட்கொள்ளப்படுவோம் 

இறப்பும் இறைவனும் 
இணையகுமோ ?
இரண்டையும் கண்டவர் 
மீண்டு வந்து சாட்சி 
சொன்னதும் உண்டோ ?

பணியாளனாகிய தனது 
பிணியானைப் பணித்து 
தணியாத அதனின் 
தாகத்தை தீர்த்து 
தனிமையை உணர்த்தும் !

மூப்பெனும் மணியோசை 
முன்பே ஒலிக்க செய்து 
முதுமையில் மூழ்கடித்து 
முன்னறிவிப்பாய் எங்களுக்கு 
உனது வருகையை 

உள்ளத்தில் வேதனையோடும் 
உருகும் உணர்வுகளோடும் 
உனை நாடி வருபவர்களை 
உவகையுடன் வரவேற்று 
உயிர் போக செய்வாய் 

பஞ்சபூதங்களின் துணையோடு 
பிஞ்சுகளையும் வஞ்சகரையும் 
நெஞ்சுரம் கொண்டவரையும் 
மஞ்சத்தில் துயில்பவரையும் 
பேதங்களின்றி கணத்தில் முடிப்பாய் 

பணத்திற்கு மயங்குவதில்லை 
அழகை ஆராதிப்பதில்லை 
பதவிக்கு பணிவதில்லை - என்றும் 
சமத்துவம் காக்கும் கம்பீரம் 
கார்ல்மார்க்ஸ் கண்ட கம்யூனிசம் 
உள்ளது உன்னிடம் மட்டுமே ...