Tuesday 27 September 2011

கண்ணீர் சிறந்தது

துன்பத்தின் உச்சத்தில் உதிரும் கண்ணீர் சிறந்தது (அதை)
துடைக்க வருவோர் உதிர்க்கும் கண்ணீரும் சிறந்தது
துவளாமல் உழைத்த களிப்பின் கண்ணீர் சிறந்தது
துள்ளும் மனதின் ஊற்றின் உற்சாக  கண்ணீர் சிறந்தது

காதலின் வெளிப்பாட்டில் கசிந்துருகும் கண்ணீர் சிறந்தது
காமத்தின் உச்சத்தில் சாந்தமாய்வரும் கண்ணீர் சிறந்தது
காதலின் தோல்வியில் ரணமாய் வரும் கண்ணீர் சிறந்தது
மோகத்தை மூடி வைத்து மனதைமுட்டும் கண்ணீர் சிறந்தது

வானத்தின் அழுகையாம் மேகத்தின் கண்ணீர் சிறந்தது
கானத்தின் மேன்மையால் சிந்தும் கண்ணீரும் சிறந்தது
ஊனத்தை வென்ற களிப்பின்  உன்னத கண்ணீர் சிறந்தது
மோனத்தின் ஆழத்தில் அன்பின் ஆனந்த கண்ணீர் சிறந்தது

உவகை கண்ணீரென இரு துருவங்களுக்கிடையே
உருண்டோடிக்கொண்டிருப்பதே இவ்வாழ்க்கை இதில்
உலகத்தில் உவகைமட்டும் உன்னதமென்று மிக
உரைப்பவர் கண்ணீரின் மகிமை அறியாதவர் .


Monday 5 September 2011

தன்முனைப்பு

தன்முனைப்பை தவிர்க்க முடியவில்லை தவிக்கிறேன்
ஆணவத்தை அடக்க முடியவில்லை ஆண்டாண்டுகாலமாய்
எளிமையான எழையிடமும் ஒளிந்துகொண்டிருக்கிறாய்
வளமையான செல்வர்களிடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
பழமையான முதியோருடன் பகட்டாய் பதிந்திருக்கிறாய்
இளமையான சிறார்களிடம் சிரித்து கொண்டிருக்கிறாய்
ஆட்சியாளரின் தலைதனில் தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
மெய்சாட்சியாய் மனம்தனில் திகழந்து சாதனைகளை
பொய்காட்சியாய் எண்ணத்திரையில் வரைந்து சோதிக்கிறாய்
மாட்சிமையான ஞானம்தனை சிதைத்து விடுகிறாய்


ஆணவம்

ஆணவம் என்பது ஆமையை போன்றது கண்டீர்
ஆதாயம் பிறர்க்கு செய்யும் போதும் மெல்ல
ஆழமாய் நுழைந்து விடும் தழைத்து விடும்
ஆற்றொன்னா நோயாய் மனதில் பதிந்து விடும்
சேவைகள் பல மக்களுக்கு செய்வேனென்று பலர்
தேவைகள்தான் அறியாது வீண் வெகுமதிகள் கொடுத்து
நாவை அடக்காது நால்வித கருத்துக்களை நவின்று
சாவைத்தான் அடைவார்கள் கடைசியில் வெறுத்து
புண்ணியங்கள் செய்கிறோம் என்ற நினைப்பினில்
புளகாங்கிதத்துடன் ஆணவமெனும் போதையில்
புரியாமல் தீயவர்களை தழைக்க வைக்கிறார்கள்
புன்செயல்கள் புரிபவர்களை பிழைக்க செய்கிறார்கள்