Sunday, 29 December 2013

சிறகடித்து வா

காலம் இன்னும் கடக்கவும் இல்லை

கடமையில் நீ என்றும் தவறவுமில்லை-நீ

கடந்திடும் பாதையில் இனி தடையுமில்லை

கலங்கிட வாழ்வில் குறை வந்திடினும்- உன்

திறத்தினில் நீ குறைவதுமில்லை

கட்டுத்தளை எறிந்து  சிறகடித்து வா வசந்தம் தூரமில்லை ...,

Wednesday, 25 December 2013

வஞ்சியெனை வஞ்சியாதே

பஞ்சணையை  வெறுத்து உன் 

நெஞ்சணையை  நினைத்து 

அஞ்சனம்   இளைத்து 

கொஞ்செனை என மொழிந்து நின்ற 

வஞ்சிஎனை கஞ்சி(கருமி)  என்றாய் 

அஞ்சிநின்றவளை கொஞ்சினேன் உனை என்றாய்

விஞ்சி நின்ற அன்பினில் வஞ்சியும் உன்

கெஞ்சு மொழி உணர்ந்து

தஞ்செமென சாய்ந்தாள் 

துஞ்சிட தோள் தருவாய் 

பஞ்சென இவள் துயர் பறக்க...,


Monday, 5 August 2013

வாலி

காதல் கவிதைகளில் கிறங்கச் செய்தாய்
தாலாட்டும் பாடலால் உறங்கச் செய்தாய்
கருணைப் பண்ணால் இரங்கச் செய்தாய்
இரங்கற்ப்பா பாட மனமில்லை ஐய்யா
 ஸ்ரீரங்கம் கண்ட பேரங்கன் உ மக்கு 

Saturday, 3 August 2013

வாலிப கவிஞர் வாலி

உலகம் சுற்றாத 'வாலி'பன் - என்றும் 
உலகை சுற்றும் 'வாலி' பண் (pun) 

Friday, 12 July 2013

செந்தமிழ்தேன்மொழியாள்(ல்)

உனது அங்கங்கள் அழகிய
தமிழ் சங்கங்கள்
உயிரெழுத்து தமிழுக்கு உன்
உயிரால் எழுது எந்தனக்கு
மெய்யெழுத்து மென்மைக்கு உன்
மெய்யால் எழுது ஆண்மைக்கு
உயிர்மெய் கலந்ததால் உதிக்கும்
உன்னத எழுத்துக்கள் - நம்
உயிர்மெய் கலந்ததை
பிரபஞ்சத்தில் எழுதுங்கள்
என்றுரைத்தாய் அழுத்தமாய்
ஆய்த எழுத்து செவ்வாயால்
ஆய்ந்து எழுதியும் என் மார்பில்
காயங்கள் ஏற்படாத மாயங்கள்
தான் என்னவோ ?!

கொற்றவனை கொஞ்சுமுன்
மொழியால் உனக்கு
உற்றவனாக்கி நிறைய
கற்றவனென்ற மமதையை
அழித்து ஆணவம் ஏதும்
அற்றவனாக்கி விட்டாய்
பற்றற்று இருக்க துணிந்தவனை
அனைத்தையும் பெற்றவனாக்கி
விட்டாய் !

Monday, 25 March 2013

பேரிளம்பெண்

தாவணி அழகாயுடுத்தி
தாய்மாமன் சீதனத்துடன்
பூப்பெய்திய எந்தனை
மூப்பெய்திய பெரியோர்கள்
வாழ்த்தினர்  வாழ்கவென்று

இளநிலை பட்டம்பெற
இளநங்கை யான் துடிப்புடன்
வரைமுறைகள் விதிக்கப்பட்டு
அறிவுரைகளுடன் சென்றேன்
கல்லூரி தனக்கு

கடைக்கண்னால் பாராமல்
 காளைகளை  கவராமல்
நடையிலும் உடையிலும்
நளினமின்றி எந்திரமாய்
சுற்றி திரிந்தேன்

சோதனை வந்தது  வாழ்வில்
சோதிடன் வடிவினில்  
சாதகத்தில் கோளாறு
என்றுரைத்து
பாதகம் புரிந்தான் பாவி எனக்கு

முதுநிலை பட்டத்திற்கு
முழுமனதுடன் சட்டதிட்டங்கள்
போட்ட பெற்றோர் சொல்
கேட்டு முழுமை பெற்றேன்
வாகை சூடினேன்

பருவத்திலே ஏற்படும் மாற்றம்
உருவத்தில் மட்டும் வந்தது
உள்ளத்தில் சின்னஞ்சிறு
குழந்தையென வாழ்ந்தேன்
குதூகலத்துடன்

பெற்றோரே சந்தேகமாய்
உற்றார் சொல்கேட்டு
கற்றோறேன்பதை
மறந்து கேள்விகளால்
துளைக்கிறார் நிதமும்

முதிர்கன்னி பட்டம் பெற்றும்
முகத்தில் புன்னகையுடன்
ஆண்டாளாய் தவத்தில்
ஆழ்ந்திருக்கிறேன்
கண்ணன் ஒருநாள்
ஆட்கொள்வான் எனையென்று ..   

Monday, 28 January 2013

எங்குசென்றாயோ ?

உலகெனும் நாடக மேடையில் ஆடி
களைத்து சோர்ந்த போன என்னை
களங்கமில்லா என்னவளே உன்
மடியில் கண்ணுறங்க செய்தாய்

கதகதப்பாய் உன் உள்ளங்கை
வெப்பம் என் கைகளில் பரவி
நாணும் உன் அழகு கண்கள் -வழி
வெளிப்படும் காதல் கனலாய்

இதழ்கள் இரண்டையும் ஒன்றாக்கி
இதயத்தை ராகங்களின் ஊற்றாக்கி
மூளை மடிப்புகளில் பாய்ந்தோட
என் முகத்திற்கு பொலிவு தந்தாய்

தோல்வியில் தலைகுனியும் போது
தோள்களை தந்தாய் தலைசாய்க்க
வருந்தும் மனதிற்கு மருந்தாய்
இருந்து துவளாமல் தடுத்தாய்

இத்தனையும் செய்துவிட்டு இனியவளே
பித்தனைப்போல் எனை புலம்பவைத்து
இத்தனை காலங்கள் எங்குசென்றாயோ ?
என்று காண்பேனோ உன்னை யான் ?

Sunday, 6 January 2013

சாக்காடு

சாவும் சாத்தானும் சரிசமமோ ?
இரண்டையும் 
விரும்புவோர் இல்லை 
உலகத்தில் எனினும் 
ஆட்கொள்ளப்படுவோம் 

இறப்பும் இறைவனும் 
இணையகுமோ ?
இரண்டையும் கண்டவர் 
மீண்டு வந்து சாட்சி 
சொன்னதும் உண்டோ ?

பணியாளனாகிய தனது 
பிணியானைப் பணித்து 
தணியாத அதனின் 
தாகத்தை தீர்த்து 
தனிமையை உணர்த்தும் !

மூப்பெனும் மணியோசை 
முன்பே ஒலிக்க செய்து 
முதுமையில் மூழ்கடித்து 
முன்னறிவிப்பாய் எங்களுக்கு 
உனது வருகையை 

உள்ளத்தில் வேதனையோடும் 
உருகும் உணர்வுகளோடும் 
உனை நாடி வருபவர்களை 
உவகையுடன் வரவேற்று 
உயிர் போக செய்வாய் 

பஞ்சபூதங்களின் துணையோடு 
பிஞ்சுகளையும் வஞ்சகரையும் 
நெஞ்சுரம் கொண்டவரையும் 
மஞ்சத்தில் துயில்பவரையும் 
பேதங்களின்றி கணத்தில் முடிப்பாய் 

பணத்திற்கு மயங்குவதில்லை 
அழகை ஆராதிப்பதில்லை 
பதவிக்கு பணிவதில்லை - என்றும் 
சமத்துவம் காக்கும் கம்பீரம் 
கார்ல்மார்க்ஸ் கண்ட கம்யூனிசம் 
உள்ளது உன்னிடம் மட்டுமே ...